February 23, 2025

திருப்பாவை 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

பொருள்:

மகிழ்ச்சியை மட்டுமே சொத்தாகக் கொண்டவளே! அழகுச்சிலையே! கிழக்கே வெளுத்து எருமைகள் மேய்ச்சலுக்காக புல் மைதானங்களில் நிற்கின்றன. எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து விட்டார்கள். அவர்கள், உடனே குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். ஆனாலும் உனக்காக தடுத்து நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம். கேசி என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர் உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி தேவனுமான கிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன் ‘ஆஆ’ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள் தருவான். பெண்ணே! உடனே கிளம்பு.

பொழுது புலர்ந்து விட்டது என்பதை இப்படி விளக்குகிறார்கள். விடிந்து விட்டது நீராட எழுந்திரு என்று எழுப்பும் பெண்கள், கறுமையாக இருந்த வானம் கிழக்குத் திசையில் வெளுத்து விட்டது. மிகவும் மந்தமான எருமைகளே எழுந்து மேய்ச்சல் நிலம் நோக்கிப் போய்விட்டன. பெண்ணே நீ இன்னும் தூங்குவது சரியா? நீவரவேண்டும் என்பதற்காகப் பலர் கோயிலுக்குப் போகாமல் காத்திருக்கின்றனர். அவர்களின் காலும் மனமும் கடுக்க வைக்காமல் வேகமாய்த் எழுந்து வா… ஓர் அசுரனின் வாயைப்பிளந்து கொன்று, “சிறுவனுக்கு இவ்வளவு வலிமையா?’ என நம்மை வாய்பிளக்க வைத்தவன் கண்ணபிரான். தாய்மாமன் கம்சன் ஏவிய பல அசுரர்களை துவம்சம் செய்தவன். அவனது புகழைப் பாடியபடி, கோயிலுக்குச் செல்வோம். அவனருள் கிடைத்தால், நம்மை குற்றமும், பாவமும் செய்ய வைக்கும் ஆசை அசுரனை, மமதை மல்லனை நாமே கொன்றுவிடலாம் என்று இந்த பாசுரத்தில் குறிப்பிடுகிறாள் ஆண்டாள்.