January 22, 2025

திருப்பாவை 14

செங்கழுனீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கற் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய்! நாவுடையாய்!
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

பொருள்:

நாங்கள் எழுவதற்கு முன்னதாகவே வந்து எங்களை எல்லாம் எழுப்புவேன் என வீரவசனம் பேசினாயே, வாக்கை மறந்ததற்கு வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டு தோட்டத்தில் செங்கழுநீர் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கிறார்கள். சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கைகளை கொண்டவனும் தாமரை போன்ற கண்களை கொண்டவனுமாகிய கண்ணனை பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!

விளக்கம்:

எப்போதுமே கொடுத்த வாக்கை தவறவிடவே கூடாது. வாக்கு கொடுப்பது சுலபம், ஆனால் அதை காப்பாற்ற தெரிந்திருக்க வேண்டும். சொன்னதை செய்ய வேண்டும் என்பதைத்தான் இந்த பாடல் உணர்த்துகிறது.